Thursday, January 12, 2012

வெற்றியைத் தேடி

         வெற்றியைத் தேடி!

பிறந்தோம் வாழ்ந்தோம் 
இறந்தோமென்று
வாழ்வதெல்லாம் வாழ்க்கையா? 

உணர்வால் மனதால்
செயலால் எல்லாம்
செத்து வாழ்வது வாழ்க்கையா? 

உல்லாசம் சல்லாபம்
எல்லாமே மண்ணாகும்
சம்சாரம் சன்யாசம்
எல்லாமே மண்ணாகும்

மதனபுத்திக் கொண்டவனே
மரித்துப்போகக் கடவாய்
மனதில் சக்தியற்றவனே 
நிலத்துக்காகு உணவாய்
கவலைகொண்ட மனமிருந்தால்
களைந்துவிட்டு எழுவாய்
சிகரம்தொட்டக் கனவுத்தீயில்
கவலைப்பேயைச் சுடுவாய்

கொதித்திருக்கும் குருதிச்சூட்டை 
அணைக்க எண்ணாதே- நெஞ்சில்
விதைத்திருக்கும் ஆசைக்கனவை
சிதைக்க எண்ணாதே
விழித்திருக்கும் விழிகள்தானே 
விளக்கைக் கண்டறியும்- தடையை
உடைத்துவிட்ட ஊழிக்காற்றே 
இலக்கைச் சென்றடையும்...

கைரேகை என்பதுவும்
சனிதோஷம்  என்பதுவும்- உன்னை
சவமாக்கச் செய்யும் முயற்சி
ஊரார்கள் உன்மீது  
பொறாமைப் படும்நாளே
உன்வாழ்வில் முழுவளர்ச்சி...

மூலையில் உன்னை
முடக்கப் பார்க்கும்
மூடத்தனத்தை முடமாக்கு
முதுகெலும்பற்ற
மூர்க்கர்கள் உலகிது 
மலைப்போல் மனதை திடமாக்கு

நாளையென்ற நாளைநம்பி
நாட்கள் கடத்தாதே- கூர்
வாளைப்போன்ற கொள்கை தன்னைக்
குப்பையாக்காதே  
விடியுமென்று நம்பி தினமும்
உறங்கச்செல்லும் நீ
முடியுமென்று நம்பிஎழுந்தால்  
விரைவில் வெற்றிவரும்!

ஊருக்காகப் பேருக்காக
வெற்றியைத் தேடாதே- உலகப்
பெருமைக்காகத் தேடிடும் வெற்றி
உனையென்றும் நாடாதே 
உயிரை உணர்வை உதிரத்துளியை   
அதற்காய் அர்ப்பணித்தால்  
உறங்காச்சுடராய் மறையாக்கதிராய்
உலகில் நிலைத்திடுவாய்!!!!

                                                                                    -ஆனந்தன்

No comments:

Post a Comment