உணர்வுத் தீ
-ஆனந்தன்
நிலவுதேயலாம் நினைவுதேயுமா
உலகம் மாறலாம் உணர்வு மாறுமா
தேகம் சாகலாம் வேகம் சாகுமா
கனவைச் சேருமுன் கப்பல்
கரையைச் சேருமா?
கவிதைமழையிலே வெப்பம்
விலகி ஓடுமா?
சிலைகள்யாவுமே உளியைச் சார்ந்தது
சிகரமடையுமுன் வலியும் சேர்ந்தது
மழலை மொழியைப்போல் மனமுமாடுது
இதயமெங்கிலும் இரைச்சல்
இசையும் கேட்குது
இனியத் தோல்விகள் மனதை
இரும்பாய் மாற்றுது
மலையில் வழியும் நீர்
அருவியாகலாம்- என்
மனதில் ஓடும் தேரதன்
இலக்கைச் சேருமா
மழையின் வெற்றிதான்
பயிர்களாகுது
மனிதன் வெற்றியோ புகழின்
மகுடம் சூட்டுது
சோர்வை வெல்பவன் வாழ்க்கை
சொர்க்கமாகுது
குழந்தைப் பருவத்தில் நீ
நடக்கக் கற்றதும்
குழறிக் குழறியே நீ
பேசக்கற்றதும்
மனதில் கல்வியை நீ
மதிக்கக் கற்றதும்
அதற்கு முன்வந்த தோல்வியை
மிதிக்கக் கற்றதால்!..
அந்த வயதிலேத் தோல்வியைக்
கொன்றுப் போட்ட நீ
இந்த வயதிலே அதற்
கஞ்சலாகுமோ???
மண்ணில் நீரின்றிப் போனால்
மரங்கள் தோன்றுமா
மரத்தில் வேரின்றிப் போனால்
மலர்கள் தோன்றுமா
கண்ணில் விழியின்றிப் போனால்
காட்சி தோன்றுமா
உன்னில் வெறியின்றிப் போனால்
வெற்றி கிட்டுமா?- பனி
மழையும் வந்ததால்
மலையும் கரையுமா?
வறுமை வந்ததால் உன்
திறமை குறையுமா?
தொல்லையேதும் இல்லை- நீ
செல்வாய் உந்தன் எல்லை- உன்னைத்
தடுப்போர் யாரும் இல்லை- தடுத்தால்
தொடுப்பாய் விழியில் வில்லை- உன்
மனதில் தீமை இல்லை- உன்னை
எதிர்ப்போர் இழப்பார் பல்லை- உன்
எல்லைக்கில்லை எல்லை- நீ
வெற்றிக்காற்றின் பிள்ளை
உடலில் உறுதி உண்டு - உன்
உணர்வில் வேகம் உண்டு - யாரும்
தீமை செய்தல் கண்டு - நீ
கொடுக்கால் கொல்லும் நண்டு- உன்
கண்ணில் கருணை உண்டு- நம்
தமிழில் பெருமை உண்டு- உன்
முயற்சியும் உழைப்பையும் உண்டு - நீ
வெற்றியைப் பருகிடும் வண்டு!!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment