Wednesday, November 16, 2011

உணர்வருவி

                      உணர்வருவி

நடந்தால் கிடைக்க வாய்ப்புண்டு 
கிடந்தால் ஒன்றும் கிடைக்காது
கிளம்பிஎங்கும் செல்லாமல் 
புலம்பித் துளியும் பயனில்லை - வெற்றிப்
பசியில் நீயும் அலைந்தால்தான்- அதன் 
ருசியை வாழ்வில் அடைந்திடுவாய்...

மரணம் என்றும் உனக்காக
சரணம் செய்துப் போகாது - உன்
நெஞ்சின் சபதம் நிறைவேற 
அஞ்சாமல் நீ செயல்படுவாய்

நேற்றுவரையில் இங்கே நீ 
தோற்றதை எல்லாம் மறந்திடுவாய்
நாளை வெற்றிப்பாதையிலே - உன்
காலைவைத்துப் பார்த்திடவே 
வீறுகொண்டு எழுந்திடுக - வியர்வைச்
சாறில் விடியல் அடைந்திடுக...

வாய்ப்புகளென்றும்  உன்வீட்டின் 
வாசல்படியைத் தட்டாது
வெற்றியின் வெறியும் குறைந்தாலே - உன்
லட்சியமென்றும் கிட்டாது

நம்பிப் போராடு; நாளை உன்னோடு
வெம்பிப் போனாலோ வெற்றி மண்ணோடு

வாழ்க்கையிலே வென்றவர்கள் 
வலியின்றி வென்றதில்லை
வலிகண்டு அஞ்சியவன்
வெற்றிக்கனி தின்றதில்லை

தரித்திரமென்று எதுவுமில்லை- நீ
சரித்திரம் படைககவேப்  பிறந்தபிள்ளை

மனதில் தளர்ச்சி கொண்டால் - உனக்கு
உலகில் வளர்ச்சியில்லை 
முகத்தில் மலர்ச்சி கொண்டால்  - உன்னை 
மதிக்காதோர் யாருமில்லை

யுகங்களெல்லாம் மாறிவிடும்- மனித
முகங்களுமிங்கே மாறிவிடும்
நீயுமோர் நாள் இறந்துபோவாய் - சேர்த்த  உன்
புகழது மட்டும் சிறந்து நிற்கும்

சோம்பலாக நீயிருந்தால்- உன் 
சாம்பல்கூட மதிக்காது
உனக்காக எப்போதும் திறந்திருக்கு கதவு- மனம்
பிணக்காக இல்லாமல் பிறருக்கு உதவு

உயிரினைவிட உழைப்பினை நேசி
காதலினைவிட கடமையினை நேசி
சாமியைவிட சேமிப்பை நேசி
கணினியை நேசி தமிழினை சுவாசி!!!!

                                                                                              -ஆனந்தன்


No comments:

Post a Comment