Thursday, November 10, 2011

சொல்ல ஒன்றும் இல்லையிதில்!!!

சொல்ல ஒன்றும் இல்லையிதில்!!!


ஒவ்வொருநாளும் ஒவ்வொருபொழுதும் 
கண்முன்னாலே வீணாகுது 
கவலையின் சாயலை செயலினில் மறைத்தும்
உள்ளம் அழுவதில் வானாகுது..

விடிந்திடும் பொழுதின் ஒவ்வொரு நொடியும்
ஓய்விலா உழைப்பினை நான் வேண்டினேன்
மடிந்திடும் நேரம் வருவதற்குள்ளே - மனம்
விரும்பிய வாழ்க்கை நான் கேட்கிறேன் 

விருப்பத்தில்மட்டும்  இனிப்பினைவைத்து
முயற்சிக்காதவன் நானல்ல - எனக்கு
தோல்வியைமட்டும் தருவது என்று- இயற்கை
முடிவெடுத்திருந்தால் என்சொல்ல?

திறந்திருக்கும் சொர்க்கம்கூட - என் 
முகத்தைக்கண்டால் மூடிக்கொள்ளும்
கறந்துவைத்த பாலும்கூட- என்
பார்வைபட்டால் திரிந்துபோகும்

விரும்பிய எதுவும் கிடைத்ததில்லை - என்னை
விலக்கிய எதையும் நான் மதித்ததில்லை
இருபத்தைந்து ஆண்டுகளில் - நெஞ்சில் 
இனித்திடும் நிகழ்வுகள் எதுவுமில்லை

ஏமாளி தினமினிமேல்
ஏப்ரல் ஒன்றல்ல
நான் பிறந்த திருநாளை
ஏமாளி தினமெனலாம்

விரக்தியினுச்ச கட்டத்தில்நின்று
அனுதினம் கதறுது எனதுள்ளம்
இருப்பினும் இதயத்தில் இனம்புரியாமல்
தினந்தினம் பெருகுது வெறிவெள்ளம்

ஒவ்வொருஇரவும்  ஒவ்வொருபகலும்
முயற்சியிலேயே முழுமைப்பெறும்
முயற்சியின் வளர்ச்சியில் தடையொன்றுமில்லை
முடிவுகள்மட்டும் தோற்றுவிடும் 

ஓடியநொடிகள் ஒவ்வொன்றும்
ஆண்டுகளாக ஆகிறது- அதை
அருகினில் பார்க்கும் என்னுள்ளம்
அச்சத்தினாலே சாகிறது...

இளநீர் குளுமை நான்வேண்டி
இலக்கை நோக்கி விரைகின்றேன்
இடிகள்தூக்கி என்மீது
இயற்கைபோட கரைகின்றேன்

என்னைப்போல முயற்சிப்போர்க்கெலாம்
எளிதில் வாய்ப்புகள் கிடைக்கிறது
என்ன தவறினை நான் செய்தேனோ?- தோல்வியின்
துயரம் நெஞ்சை அடைக்கிறது...

வெறுமையின் வேதனை தாங்கிடவில்லை
இனியது எனைவிட்டு நீங்கிடுமா?
கருமையாய் தோன்றும் என்மனவானில்
கட்டிடம்கட்டி வாழ்ந்திடுமா?...

கையிலிருப்பதைக் களவாட - நட்பைக்
காட்டிச் சிரித்திடும் ஒருகூட்டம் 
மெய்யிலெங்கும் காயமில்லாமல் - உயிரை
உருவி எடுத்தபின் விடும் ஓட்டம்

கர்ப்பத்திலிருக்கும் சிசுவைக்கூட - தன்
தித்திக்கும் பேச்சால் மயக்கிவிடும் - இந்த
சர்ப்பத்தை விடவும் சாதனை மனிதரை
சந்தித்த உடனே விலக்கவில்லை

பன்றியொத்தப் பதர்களுக்கும்
பரிகாசப் போலானேன்
பஞ்சம்நீக்கும் ஒளியாக
ஜொலிக்க எண்ணி  இருளானேன்...

வலியுடன் வாழ்ந்தேப் பழகியதாலே - தொல்விஎனும்
எலிகளைக் கண்டினி பயமில்லை
நரகத்தின் கொடுமைகள் நகரத்தில் கண்டேன்- அதனால்
எதுவும் எனக்கினி புதிதில்லை

எதிர்வரும்  தோல்விகள் எல்லாம் எனக்கினி
காலின்கீழே செருப்பாகும்
வெற்றியைத் தேடிடும் எந்தன்நெஞ்சம்
எரிமலை கக்கும் நெருப்பாகும்!!!

                                                                                                          -ஆனந்தன் 

No comments:

Post a Comment