Saturday, July 9, 2011

கனவுக்காதலி!!!

           கனவுக்காதலி!



குழலோசை குயிலோசை
எல்லாமும் உந்தன்
குரலோசை போலினிதாய்
என்செவிக்கு இல்லையடி
நாவுருகி நான்பேசும்
தாய்மொழியின் சுவைக்கூட- உன்
வாய்மொழியில் கேட்கையிலே
வண்ணங்கள் கூடுதடி..
முக்கனியாம் சர்க்கரையாம்
மூப்பற்ற வானமுதாம்
எச்சுவைதான் பெரிதென்றால்- உன்
இதழ்ச்சுவையே பெரிதென்பேன்...
வானுலக வெண்ணிலவும்
வாசமலர் பூவினமும்
தேவலோகக் கன்னியரும்
தேடிவந்து சேவைசெய்யும்- உன்
பாதமலர் பட்டுவிட்டால்
பாலையிலும் பூமலரும்
ஓரவிழி தீண்டிவிட்டால்
ஒருபிறவி மோட்சம்பெறும்...

செஞ்சாந்துக் குங்குமமும்
செங்காந்தல் பூநிறமும்
நாணத்தில் நீ சிவக்கும்
நேரத்தில் நிறமிழக்கும்
விழிபறிக்கும் வைரங்களும்
விலைகளற்ற விண்மீன்களும்
உயிர்பறிக்கும் உன்னழகைக்
கண்டுமனம் வெம்பிவிடும்
இமயமலைப் பனியுருகி
எந்தனுடல் மறைந்தபோதும்
தீயின்சூட்டை தவிர்த்து உந்தன்
சுவாசசூட்டில் உயிர்பிழைப்பேன்
முன்பெல்லாம் வானவில்லில்
எட்டு நிறம் இருந்ததுவோ?
வெள்ளைநிறம் தனைத்திருடி
பல்வரிசை செய்ததுயார்?..
கருநாகக் குழலுக்கு
மணமில்லை எனச்சொன்ன
நக்கீரன் முன்வந்தால்
சொற்போரில் வென்றிடுவேன்...

நெடுநாளாய் உனையெண்ணி
மனதிற்குள் தவம் செய்தேன்
மணநாளும் வாராதோ
மழை மண்ணைச் சேராதோ?
ஒருகோடி காதல்பூ
உள்நெஞ்சில் பூக்கக்கண்டேன்
என்காதல் பூவெல்லாம்
உன்கூந்தல் ஏறாதோ?
அடிவானம் சுமக்கின்ற
அக்கினியாம் சூரியன்போல்
உன்மோகத் தாக்குதலில்
என்தேகம் வேகுதடி...
கடிவாளம் இல்லாதக்
காற்றாக உன்னாசை
வருகின்ற வேகத்தில்- உயிர்
வேரறுந்துப் போகுதடி- உன்
நிழல்கூட உனைநீங்கும்- என்
நினைவுன்னை நீங்காது- என்
நினைவுன்னை நீங்கிவிடில்
உடல் ஜீவன் தாங்காது...

இதயமெனும் வீணையதன்

நரம்பறுத்து சிரித்தாய்
இரவுகளில் இரக்கமின்றி
உறக்கத்தையும் பறித்தாய்
மொட்டுவிட்ட காதல்பூவை
முளையிலேயே எரித்தாய்- என்னுள்
மூண்டுவிட்ட ஆசைக்கெல்லாம்
முடிவுநாளைக் குறித்தாய்...
மரணத்தின் வாயிலிலே
நானிருக்கும் போதும்- என்
மனம்முழுதும் உன்நினைவே
நிறைந்திருக்க வேண்டும்
மரணத்தின் பின்கூட
உடலற்ற உயிரும்- என்
மகராணி உன்னைத்தான்
மனதாலேத் தீண்டும்!!!!!


                                                                    -ஆனந்தன்

No comments:

Post a Comment