கவியுலகின் நிரந்தர அரசே பாரதி- நீயே
புவியுலகிலென்னை வழிநடத்தும் சாரதி!
தமிழாலே உன்வாழ்வில்
உயர்வொன்றுமில்லை
உன்னாலே தமிழுக்கு
உயர்வென்ப துண்மை
தீர்க்கதரிசனக் கனவுகளே- உன்
தேவப்பிறவிக்கு சான்றுகளாம்
வார்த்தை மழையினை வார்த்ததனால்- கவிதை
வானில் நீயே வெண்ணிலவாம்
அகரமுதல திருக்குறள் முதல்வரி
அறம்செய்ய விரும்பு
அவ்வையின் முதல்வரி
அருள்நிறைக் கவியால் உலகினையாண்ட
ஆண்டவனே நீ
அகிலத்தின் முகவரி!!!
உயிரோடு வாழ்ந்திருந்த காலத்திலே- உன்
வறுமை போக்கிடவே யாருமில்லை
அப்போது உன்னோடு நானிருந்தால்- என்
தலையைத் தந்தேனும் காத்திருப்பேன்
சராசரி எண்ணங்களை
களையச்செய்தாய்
சதாஎன் நெஞ்சில் தீயை
எரியச்செய்தாய்
பராமரிப்பில்லாத
செடியாய் வாழ்ந்தேன்
படாரென என்னுள்வந்து
பலனைத் தந்தாய்
வெட்டரிவாள் மீசை
வெகுண்டெழுந்தப் பார்வை
சுற்றித் தலைப்பாகை- இவை
மூன்றுமட்டும் போதும்- சிறு
குழந்தை உன்பேர் ஓதும்
கட்டவிழ்த்த காளை
காட்டாற்று வெள்ளம்
கதிரவனின் கனலும்- உன்
பார்வையிலேத் தெறிக்கும்- கண்ணோ
கடலைக்கூட எரிக்கும்- நீர்
பிறந்தஊர்க்குச் சென்றுவிட்டால்
உடலெனக்கு சிலிர்க்கிறது- நீர்
மிதித்தமண்ணை மிதிக்கக்கூட
எனதுமனம் மறுக்கிறது- நீர்
பட்டதுன்பம் எண்ணுகையில்
ரத்தம்கூட துடிக்கிறது- என்
குருவென்றுன்னைக் கூவிச்சொன்னால்
என்னை எனக்கேப் பிடிக்கிறது
அச்சமில்லை என்றபாட்டால்- என்
அச்சத்தை நீக்கி- பயம்
மிச்சமில்லை என்றுஎனை
ஆளாக்கி- எதுவும்
உச்சமில்லை நீயேயுலகின்
உச்சமென்றீர்- என்னை
துச்சமாக எண்ணுவோரை
எச்சமாக எண்ணவைத்தீர்!
உள்ளத்திலே ஏற்றிவைத்தீர்
புரட்சியெனும் தீபம்- என்
நாவினிலே கவிமலர
போட்டுவிட்டீர் தூபம்
உம்மீதும் எனக்குவொரு
சின்னஞ்சிறு கோபம்- நான்
பிறக்குமுன்னே மறைந்ததனால்
காணவில்லை உம் ரூபம்!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment