மறுபடி எழுந்தான் மாவீரன்!
காலனின் பசிக்கு
மனிதனின் உயிர்தான்
உணவாச்சோ!
கனவுகள்கொண்டோர்
உயிரினைக் கொய்தல்
காலா! உந்தன் கனவாச்சோ!
காலா நீயும்
எங்கேயுள்ளாய்- என்
கண்முன் வந்தே
நிற்பாயோ!
வேலாய் பாய்ந்து
தீமைக்கொல்லும்- என்
விழியில் பாடம்
கற்பாயோ!
எந்தன் நெஞ்சின்
உறுதிக்கிணையாய்
ஊரில் சொல்வர்
எஃகினை!- அதை
அறிந்தபின்னும்
என்னுயிர் வேண்டின்
நீயே உலகில்
அஃறிணை!
பூமியின் சூரியன்
இவனிடமுந்தன்
சாகசவேலைகள்
செல்லாது
பூகம்பம் கடலலை
புயல் வந்தாலும்- இவன்
பார்வையின் முன்னே
நில்லாது!
மானிட இனத்தினை
மாயத்திடுமுந்தன்
மந்திரமோர் நாள்
பொய்த்துவிடும்
விண்வெளிஎட்டும்
விஞ்ஞானம் தான்- உன்
வேலைக்கு உலையும்
வைத்துவிடும்
எலும்பும் சதையும்
குருதியும் கொண்ட
பிண்டங்களென்றா
எமை நினைத்தாய்!
எதையும் தாங்கும்
இதயம்கொண்ட - தீக்
குளத்தினில் நீயும்
கால் நனைத்தாய்!
பூமியிலெந்தன்
புகழினைக் கண்டு
முட்டாள் காலனும்
திகைத்தானோ!
தீபத்தில் மோதி
ஜீவனை மாய்க்கும்
விட்டில் போலென்னைப்
பகைத்தானோ! - காலா! நான்
இடியொலி கேட்ட
நாகம்- என்முன் நீ
உண்டிவில் கண்ட
காகம்- என்
உயிரின் மீதுனக்கு
மோகம் - நான்
என்றும் அழியா
ராகம்!!!
-ஆனந்தன்

all r nice poetries... u r a good poet. keep writing. my wishes...
ReplyDeletethanks..
ReplyDelete