மரணப்படுக்கையில் மாவீரன்!
காலனும் பறிமுதல் செய்கின்றான்
எண்சாணுடம்பில் உயிரினைமட்டும்
ரகசிய அறுவடை செய்கின்றான்
காலங்கள்மாறிப் போகின்றபோதும்
கடலலை ஓய்வதில்லை
காற்றின் ஓட்டம் கார்முகில் கூட்டம்
காற்றின் ஓட்டம் கார்முகில் கூட்டம்
இவைகளும் ஓய்வதில்லை
இதுவரை மனதினில் துடித்த என் உணர்வுகள்
திடுமென முடங்கிவிடும்
இருதயவேகமும் இலக்கிய தாகமும்
இயற்கையுள் அடங்கிவிடும்
விழிகளில் வீசிடும் சுடரொளி தீபம்
நொடிகளில் அணைந்துவிடும்- இந்த
பகலவன் நினைவுகள் இறப்பெனும் இரவுடன்
இரண்டற இணைந்துவிடும்
மனிதனின் பிறப்புக்கும் மரணத்தின் பிணைப்பிற்கும்
இருக்கின்ற கணக்குகள் தீராதா?
சாதியின் சாயமும் மதமெனும் மாயமும்
மரணத்தின் கணக்கினில் சேராதா?
ஒருமுறைக்கேட்டால் உயிரையும் தந்திடும்
நண்பர்கள் உறவைப் பிரிவேனோ?
ஒருவருமற்ற நிலையினில் நானும்
விறகுகளோடு எரிவேனோ?
என்னுடலின்று எரிகிறபோதுமென்
எண்ணங்கள் எரியாது- இந்த
மாமலை மீதினில் பாறைகள் சரியும்
மாமலை சரியாது!
எந்தன் ஆவி சென்றால்கூட
மண்ணில் நானும் நிலைத்திடுவேன்- என்
பொங்கும்வேகப் பாடல்வரியில்- உயிர்
விதைகளை நாளும் விதைத்திடுவேன்!!!
-ஆனந்தன்

No comments:
Post a Comment