Friday, March 18, 2011

தோழா.....

               தோழா.....
.
நீல வானத்தையும்
நகரும் மேகத்தையும்
கோலக்குமரியையும்
கொட்டும் அருவியையும்
எழுதுவதில் இன்பமெனக்
கிருப்பதுபோல் தோன்றவில்லை...
உன்னை எண்ணியொரு
வார்த்தை எழுதுமுன்னே
எந்தன் எண்ணமெல்லாம்
இன்பமயமாகுதடா...
உந்தன் திருமுகத்தை
கண்ணில் நிறைத்திருந்தால்
செல்லும் வழி முழுதும்
செண்பகப் பூ  மணக்குதடா...

வீட்டுக்கு நிலை
ஆற்றுக்குக் கரை
மண்ணுக்கு மழை-நீ என்
கண்ணுக்கு இமை...

கடலுக்கு நுரை
உடலுக்குத் தலை
வானுக்கு மதி-நீ என்
வாழ்க்கைக்கு நிதி

தோழனுக்குத் தேவைப்பட்டா
ஜீவனையும் கொடுப்பேன்
தோழனுயிர் எடுக்கவரும்
காலனுயிர் எடுப்பேன்...

தோள் சேர்த்து  நடக்கையிலே
தோல்வியெல்லாம் மறக்கும்-உன்
சொல் கேட்டு சிரிக்கையிலே
தேள் கடியும் இனிக்கும்...

ஏழையாகப் பிறப்பதுவும்
கோடிகளில் குளிப்பதுவும்-உன்
பெற்றோர்கொண்ட பணத்தாலே-நீ
உன்னதனாவதும் உன்மத்தனாவதும்
உன்னதன் நட்பின் தரத்தாலே...

பாவத்தின் சம்பளம் மரணம்
பைபிள் சொல்கிறது-இப்
பிறவிக்கு சம்பளம் நட்பு-என்
பேனா சொல்கிறது...

முகத்தைப் பார்த்தே என்
அகத்தைச் சொல்வாய்
அகத்தைப் பார்த்தால்-அதிலுன்
முகதைப்பார்ப்பாய்...

தூரத்திலிருந்தாலும்
தும்மல்கள் மூலம்-நம்
தூய நட்பினையேத்
தூண்டிவிடும் காலம்-நீ
எத்தேசம் சென்றாலும்
அத்தேசக் கதிரை
உத்தேசமாகப்பார்
என் பிம்பம் விரியும்...

வாழ்வில்நான் வருந்தியது உண்டு-என்
வயிறுன்னால் வருந்தியது இல்லை...
ஆபத்தில் நானிருக்கும் போதும்-காக்கும்
தீபத்தைப் போல்நீயும் வருவாய்...
நீயென்றா நானுன்னைப் பார்த்தேன்..-என்
தாயென்றே நானுன்னைப் பார்த்தேன்...

தங்குவதற்கிடந்தந்தாய்
தசைக்குறுதி தனை ஈந்தாய்...
சிங்கமென முன்னின்று-என்
சிந்தையினைக் காவல்செய்தாய்...
வங்கக்கடல் நிறைத்த
உப்பும் தொகுமட-என்
நெஞ்சக்கடல் நிறைத்த
நட்புடன் ஒப்பிட்டால்...

ஆகாயம் பூலோகம்
பாதாளமெல்லாம்
அழிந்தாலும் நம்நட்பு
அழியாது தோழா...-என்
எழேழுப் பிறவிக்கும்
ஈடென்ன வென்றால்
உன்னோடு நான்கொண்ட
நட்பொன்று தான்டா...

பெற்றெடுத்தது
வெவ்வேறு அன்னை..-நடைப்
போட்டுத் திரிந்தது
வெவ்வேறு திண்ணை-நாம்
அள்ளிசுவைத்தது
வெவ்வேறு மண்ணை...-நம்மை
ஒன்றாகச் சேர்த்த திந்தச்
சிங்காரச்சென்னை...

நண்பர்கள் எல்லோரும்
ஒன்றாகக்கூடிடும்
நாட்களில் சொர்க்கம் வரும்-நம்
நம்பிக்கையேயந்த
சொர்க்கத்தைப் பக்கத்தில்
சீக்கிரம் கொண்டு வரும்...

                                                                             -ஆனந்தன்
 

ஏனையக் கவிதைகளுக்கு
 
www.naanananthan.webs.com

No comments:

Post a Comment