Friday, March 18, 2011

அரசியல்வியாதி!

                   அரசியல்வியாதி!


பேயும் பேயும் கூடும்நேரம்-ஓர் 
ஆணும்பெண்ணும் கூடினரன்று-தன் 
வாயால் ஊரை ஏய்த்திடும் தீயாய்
வந்தான் பொய்மை வேந்தனின்று...

பதவியிலே உயர்ந்தோர்க்குப் 
பகலினிலே கால்பிடிப்பான்-அவர் 
இடுகின்ற கொலைப்பணிக்கு
இரவினிலே வாள் பிடிப்பான்..
 
நான்குபேர்கள் அருகிருந்தால்-நாட்
டாமை செய்கிறான்
நாயகனாய் நடுவில் நின்று
தீமை செய்கிறான்

பத்துபேர்கள் பக்கம் நின்றால் 
பதவிக் கேட்கிறான்-ஜாதிப்
பித்துக் கொண்டோர் ஒட்டு எனும் 
உதவிக் கேட்கிறான்.

கயமை செய்து ஏரியாவின்
கவுன்சிலராகிறான் - பின்பு
பயமில்லாது பாய்ந்து பலர் 
கதை முடிக்கிறான்

ஆளும் கட்சி தன்னில்  சென்று
ஐக்கியமாகிறான்
அல்லக்கைகள் அன்பைக்கண்டு 
பைத்தியமாகிறான் 

சட்டமன்ற உறுப்பினராய் 
வெற்றிச் சூடுவான்
சட்டைபையில்  சட்டமென்று 
மெட்டுப் பாடுவான்

ஊரிலுள்ள சுவற்றையெல்லாம்
நாஸ்தியாக்குவான்
தொகுதிநிதிப் பணத்தையெல்லாம்  -தன்
ஆஸ்தியாக்குவான்.

வீதிக்கொரு மதுக்கடையின் 
ஒனராகுவான் 
வீசும் காற்றிலாடும் டிஜிட்டல்
பேனராகுவான் 

சாலை போட வரும் பணத்தில்
சேலை வாங்குவான் 
பாலம் கட்ட வரும் பணத்தை-எதிர் 
காலமாக்குவான்

மந்திரியாய் மாறிவிட 
ஆசைக் கொள்ளுவான்-ராஜ
தந்திரியாய் தலைமையிடம்
காசைத் தள்ளுவான்
மந்திரித்துக் கையில் கட்டும்  
தாயத்துக்கள் போல் -நிதம்
சுந்தரிகள் வலைக்கரத்தில் 
ஊஞ்சலாடுவான்

வாக்களித்த மாக்களுக்குப்
பிச்சை போடுவான்-தான்
வாறியதும் மிச்சமுள்ள
எச்சைப்  போடுவான் 

அரசுவேலைப் பெற்றுதர
லஞ்சம் வாங்குவான்-லஞ்சம்
கொடுத்தவனோ இறுதியாக
நஞ்சை வாங்குவான்

ஸ்விட்சர்லாந்து  வங்கியிலே 
பற்றுத் தொடங்குவான்- ஊரைச் 
சுற்றியுள்ள நிலத்தையெல்லாம்- தன் 
பெயரில் மாற்றுவான்

வாக்குறுதிப்  பல தந்து
ஓட்டு வாங்குவான்-பின்போ 
நாய்க்குருதி மனிதனிவன் 
வீட்டில் தூங்குவான்

ஓட்டுப் போட்ட மக்களுக்கு 
வாட்டரில்லையே
தேர்தல் நேரம் வந்து விட்டால்
குவாட்டர் தருகிறான்
 
ஒட்டுக் கேட்கும் போதுமட்டும்
விழுந்து வணங்குவான்
வென்று விட்டாலன்றுமுதல் 
உயிரை வாங்குவான்

அடக்குமுறைக்  கஞ்சாதோரை
அடக்கம் செய்கிறான் 
அரசு அதிகாரிகளை 
முடக்கம் செய்கிறான்        
             
பள்ளிக்கல்வி தனைக்கூட 
தாண்டிய தில்லை - பல 
கல்விக்கூடம் கட்டிக்கல்வித் 
தந்தையாகுவான் 

தேர்தலுக்கு தேர்தலிவன்
கட்சி மாறுவான்
தேசப்பற்று பற்றியவன்
புத்திக் கூறுவான் 

பகலிரவு பாராமல்
போதையிலிருப்பான்
பாழ் செயல்கள் புரிவதிலே 
மேதையாயிருப்பான்

நேர் வழியில் செல்லுவோரை
நோகடிக்கிறான் 
நேர்மை என்னும் சொல்லை யிவன்
சாகடிக்கிறான்

அல்லக்கையின் அன்புமகன்
கூட ஊரிலே 
ஆடம்பரமாகச் செல்வான்
பென்ஸ் காரிலே...
பல்லக்கைத் தூக்குகின்ற
அல்லக்கை  மகன்கூட 
செல்வாக்காய் வாழும்போது 
வில்லாதி வில்லனிவன்
பெற்றடுத்தப் பிள்ளையெல்லாம்
வேற்றுகிரகத்தையே 
விலைக்கு கேட்கும்
வீடு கட்ட...

மலத்தையொத்த  மனத்தைப் பெற்ற
மனிதன் இவனையே 
மந்திரியாய் கொண்ட மக்கள் 
நொந்து சாகனும்-அடியாள் 
பலத்தை வைத்துக் களத்தில் நிற்கும்
கயவன் இவனையே 
கருணை மிக்க கடவுள்யாரும் 
கொன்று போடனும்...

சரியிவன்தான் சதிகாரன்
என்றுச்சொல்லியே 
அடுத்தவனைத்  தேர்ந்தெடுத்தால்-அவனும்
அழிக்கும் கொல்லியே!!!!!!!!       

                                                                                -ஆனந்தன்

No comments:

Post a Comment