Thursday, April 28, 2011

கனவுக் காதலி!!!




               கனவுக் காதலி

மாலை மயங்குகிற நேரம் -விண்
மீன்கள் முகம்தெரியும் நேரம் -பெண்
மார்பைத் திரைமறைத்தல்  போல -செவ்
வானை முகில் மறைத்தல் கண்டேன்
நானும் தனித்திருந்த நேரம் -அந்த
தேவத்திருமலரைக் கண்டேன்

நேரே என்னிடத்தில் வந்தாள் -நெடுங்
காலக் காதலினைச் சொன்னாள்
போதை நினைவுடனே நானும் -அவள்
பேசும் வார்த்தைகளைக் கேட்டேன்
கண்ணால் கவிபலவும் சொன்னாள் -அட
இன்றே என்வாழ்வின் பொன்னாள்

காதல்மொழிகளினை விடவும் -என்
வாழ்வின் லட்சியத்தை மதித்தாள் -என்
தீய நடைமுறைகள் விலக -சில
கட்டுப்பாடுகளை விதித்தாள் -அதைநான்
ஏற்றுக்கொண்டதிலே மகிழ்ந்து -கன்னத்தில்
கன்னிமுத்தமொன்றைப் பதித்தாள்

அந்நேரம்  என்தேகம் சூடானது
என்நெஞ்சம் எரிகின்ற காடானது
முல்லைப்பூ முத்தத்தை நீயிட்டதும் -உன்
முகம்போல என்கன்னம் மேடானது
பெண்ணென்ற வீணைமேல் என் கைகளும் -என்னை
அறியாமல் ஒருமோக இசைமீட்டுது -அந்த

நாணத்தில் பெண்கன்னம் சிவக்க
நான்மட்டும் அதைக்கண்டு ரசிக்க
தேன்முல்லைப் பூவொன்று வெடிக்க -அந்த
தேனாற்றில் நான்முங்கிக் குளிக்க
அடடா! அதுதான் இன்பநிலை
அன்பே நீதான் தங்கச்சிலை

தாமரை மலர்போன்ற உன்முகத்திலே
காமனின் கைக்கொண்ட வில்லைக்கண்டேன் -
                                                                   அதன்கீழ்
கெண்டை மீனிரண்டு துள்ளக்கண்டேன் -அவை
எந்தன் கண்ணைவந்து கிள்ளக்கண்டேன்
அவைதான் அன்பே உன் விழியோ -அவை
பேசுவதெந்தத்  திருமொழியோ???

உடலும் உயிரும் உனக்கேயென்றாய்
உந்தன் முகம்தான் கிழக்கேயென்றாய்
இரவும்பகலும் இனிதாய் நகர
எந்தை நினைவே துணைதானென்றாய்
எந்தன் ஜீவனை அன்பால் வருடி -நீ
என்னைத் திருடிய அழகுத்திருடி!!!

நெற்றியது மூன்றாம்பிறை
சிற்றிடையோ முல்லைக்கொடி
நெஞ்சினிலே சொர்க்கபுரி- அதைச்
சொல்லிடவும் இல்லை வரி
இரும்புமலை உருகியது -அதையுன்
இளமையள்ளிப் பருகியது...

உன்னுடலென்பது  காந்தமடி -அதில்
என்மனமானது சாந்தமடி -நம்
உறவுகளென்றும் இனிக்குமடி -அதில்
உயிர்பல மீண்டும் ஜனிக்குமடி
காலனின் கண்வலை வளைத்தாலும் -நம்
காதலின் இன்பங்கள் நிலைக்குமடி!!!

கதிரவன் கடமை தொடங்கியது -கண்
உறக்கமும் அத்துடன் அடங்கியது
அடச்சே! எல்லாம் கனவாச்சே
கானல் நீர்தான் எனதாச்சே!
கனவின் முத்தம் காய்வதற்குள்ளே -நெஞ்சில்
கவிதையுத்தம் மலர்ந்தாசே!

கனவில்மட்டும் என்னுடனே -மனம்
கலந்தேப் பேசும் பெண்ணினமே!
கனலாய் எரியும் என்மனதில் -குளிர்
நிலவாய் உன்முகம் மின்னிடுமே -உலகில்
உன்னைப்போல் அழகானப் பாவையில்லை -
                               உன்னை நினைத்தால் நான்
பறந்திட இறக்கைகள் தேவையில்லை!

என்றைக்கு வருவாய் என்னை நீ தேடி -நாம்
என்றைக்கு மகிழ்வோம் ஒன்றாகக்கூடி
சிந்தைக்கு விருந்தாகும் தென்பாண்டித் தமிழே -
                                                                        எனக்கு
என்றைக்கு விருந்தாகும் உன் கோவை இதழே!
உனக்காகக் காத்திருக்கு என்னெஞ்சின் மஞ்சம் -அதில்
என்றைக்கு அன்பே நீ உளமாறத் தஞ்சம்!!!!


                                                                                                 ஆனந்தன்

No comments:

Post a Comment