Friday, February 22, 2013

வாசகர் கடிதம்

அன்பரே...
 
உங்கள் கவிதை கடல் கடந்து நண்பர் போதகர் அருள்தாஸ் மூலம் கிடைத்தது.. முன்னுரையை நான் எப்பொழுதும் கடைசியில் தான் படிப்பேன். ஆனால் உங்களின் முன்னுரையே முன்னூறு கவிதைக்குச் சமம்.
 
நல்ல சிந்தனை என்பது நாம் வாழும் வாழ்வில் இருக்கிறது. உங்களின் வாழ்க்கை இந்நூலில் தெரிகிறது.
 
கடந்த ஆண்டு நண்பர் போதகர் அருள்தாஸின் ஒத்துழைப்புடன் அந்தமான் அலைகள் என்று ஒரு பாடல் குறுந்தகடு வெளியிட்டேன். அதில் பாரதியை மறுபடியு பிறந்து வா அதுவும் அந்தமானுக்கு அந்த பாக்கியம் தா என்றும் பாடல் எழுதிப் பாடியும் இருந்தேன். அதில் நானும் பாரதீ என்று குறிப்பிட்டேன்...
 
என்ன ஒரு ஆச்சரியம் நீங்களும் அதனை சிந்தித்திருக்கிறீர்கள்.
 
வாழ்க உங்கள் தமிழ் பயணம்.
 
உங்கள் கவிதைகளை அந்தமான் இலக்கிய மன்றம் மூலம் இத்தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
 
உங்கள் அனுமதி கிடைத்தால் இங்கிருந்து வெளிவரும் தமிழ் வார இதழ்களிலும் கவிதைகளை வெளியிட வைக்கலாம்.
 
இத் தீவில் தொலைக்காட்சியில் மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை குறித்து கலந்துரையாடல் நிகழ உள்ளது. அதிலும் உங்கள் கவிதை பற்றி குறிப்பிட உள்ளேன் - உங்கள் அனுமதியுடன்...
 
வாழ்க வளமுடன்

T N Krishnamoorthi                 
9434289673
அந்தமான்                             

Wednesday, August 8, 2012

மனதுடன் போராட்டம்


மனதுடன் போராட்டம்

தெளிவான மனநிலையைப் 
பற்றிக்கொள் மனமே !
குரங்கைப்போல் அங்குமிங்கும் 
தாவாதே மனமே !
எப்போதும் ஓர் நிலையில் 
இருந்துவிடு மனமே !
என்றென்றும் உன் தலைவன் 
நான்தானே மனமே !

தப்பென்றால் உடனேயே 
உரைத்துவிடு மனமே ! 
சஞ்சலங்கள் எவற்றிற்கும் 
இடம்கொடாதே மனமே !- நான் 
சொல்லாமல் நீயாகச் 
செல்லாதே மனமே !

அச்சத்தினை துச்சமாக 
மதித்துவிடு மனமே ! 
ஆசையினை அதிகமாக 
வளர்த்துவிடு  மனமே !-அதை 
அடைந்துவிடும் வழியினையும் 
அளித்துவிடு மனமே ! 

காதலினைக் கருவிலேயேப் 
புதைத்துவிடு மனமே !
வெற்றியினை மனதிலேயே 
விதைத்துவிடு மனமே !

நீ ஜெயிக்கும் நாளும் தான் 
தூரமில்லை மனமே ! 
வென்றுவிட்டால் என்றென்றும் 
என்னுடைய தினமே !
சாதிக்காமல் வேகாது 
என்னுடையப் பிணமே...
சரித்திரத்தில் என்பெயரும் 
வருவதுவும் நிஜமே !!!!

                                                                                                                   -ஆனந்தன்




Thursday, July 26, 2012

தன்மானத்திற்கு வெகுமானம்

தன்மானத்திற்கு வெகுமானம்

தாயின் கருவில் வளரும்போதே - தன் 
மானமும் வளர்ந்ததுவே - பின்பு 
தரைக்குவந்த நாள்முதலாய்- அதுவும்
தவழ்ந்து வந்ததுவே !
தாழ்வாய்ப் பார்த்த யாரையுமேயது 
தட்டிக்கேட்டதுவே- உயிர் 
எட்டிப்பார்த்ததுவே - மனம் 
திட்டம் போட்டதுவே ! 


நமக்கு யாரடா முதலாளி- நாம் 
அனைவரும் இயற்கையின் தொழிலாளி 
தனியொரு மனித ஜடத்தின் 
முன்னேச்சென்று 
கைகட்டி நிற்பதுவோ 
மெய்ச்சுருக்கி அவன்சொல் கேட்பதுவோ?


ஊர்க்காக்கும் காவலனைக்கண்டு 
பயந்து ஓளிந்து ஓடுவதோ - பெருங் 
கடல்தனிலேச் சென்று 
உப்பினைத் தேடுவதோ-பெண் 
கற்பினைப் பாடுவதோ?-உன் 
தப்பினைச் சாடுவதோ?..


மூன்றுவேளையும் உனக்குத்தேவை 
நல்லவித உணவு 
உன்னகத்தே சுத்தமாக 
இல்லையொரு கனவு 
எங்கேயும் யாரிடத்தும் 
யாதென்று வினவு 
எப்போது என்கனவு 
ஆகுமொரு நனவு - உன் 


கண்களிலே எப்போதும் 
தெரியவேண்டும் வீரம்- உன் 
பின்னோரும் உணரவேண்டும் 
அதனுடைய சாரம் - உன் 
எதிரிக்கும்  மிகுதியாக  
இருக்கவேண்டும் தகுதி 
ஏழையாகப் பிறந்தாலும் 
கோழையாக இறக்காதே!


உழைக்கும் கரங்கள் 
உயர்ந்திட வேண்டும் -மனித 
உறவுகள் இன்னும் 
உரம்பெற வேண்டும் -பிறரை 
அண்டிப்பிழைக்கும் 
அடிமை வாழ்க்கை 
அறவே இங்கே 
அழிந்திட வேண்டும் 


பாசத்தால் யார் 
பரிவு செய்தாலும் 
பாதம்பணியும் 
மேன்மை வேண்டும் 
பாதக நெஞ்சோர் 
பக்கத்தில் வந்தால் 
பதறவைக்கும் 
ஆண்மைவேண்டும் 
பாரதத்தாயைப் 
பழிப்பவர் கண்டால் 
பாம்பென் றெண்ணிப்  
பிளந்திட வேண்டும்!!!
                                                                       -ஆனந்தன் 



Thursday, January 12, 2012

வெற்றியைத் தேடி

         வெற்றியைத் தேடி!

பிறந்தோம் வாழ்ந்தோம் 
இறந்தோமென்று
வாழ்வதெல்லாம் வாழ்க்கையா? 

உணர்வால் மனதால்
செயலால் எல்லாம்
செத்து வாழ்வது வாழ்க்கையா? 

உல்லாசம் சல்லாபம்
எல்லாமே மண்ணாகும்
சம்சாரம் சன்யாசம்
எல்லாமே மண்ணாகும்

மதனபுத்திக் கொண்டவனே
மரித்துப்போகக் கடவாய்
மனதில் சக்தியற்றவனே 
நிலத்துக்காகு உணவாய்
கவலைகொண்ட மனமிருந்தால்
களைந்துவிட்டு எழுவாய்
சிகரம்தொட்டக் கனவுத்தீயில்
கவலைப்பேயைச் சுடுவாய்

கொதித்திருக்கும் குருதிச்சூட்டை 
அணைக்க எண்ணாதே- நெஞ்சில்
விதைத்திருக்கும் ஆசைக்கனவை
சிதைக்க எண்ணாதே
விழித்திருக்கும் விழிகள்தானே 
விளக்கைக் கண்டறியும்- தடையை
உடைத்துவிட்ட ஊழிக்காற்றே 
இலக்கைச் சென்றடையும்...

கைரேகை என்பதுவும்
சனிதோஷம்  என்பதுவும்- உன்னை
சவமாக்கச் செய்யும் முயற்சி
ஊரார்கள் உன்மீது  
பொறாமைப் படும்நாளே
உன்வாழ்வில் முழுவளர்ச்சி...

மூலையில் உன்னை
முடக்கப் பார்க்கும்
மூடத்தனத்தை முடமாக்கு
முதுகெலும்பற்ற
மூர்க்கர்கள் உலகிது 
மலைப்போல் மனதை திடமாக்கு

நாளையென்ற நாளைநம்பி
நாட்கள் கடத்தாதே- கூர்
வாளைப்போன்ற கொள்கை தன்னைக்
குப்பையாக்காதே  
விடியுமென்று நம்பி தினமும்
உறங்கச்செல்லும் நீ
முடியுமென்று நம்பிஎழுந்தால்  
விரைவில் வெற்றிவரும்!

ஊருக்காகப் பேருக்காக
வெற்றியைத் தேடாதே- உலகப்
பெருமைக்காகத் தேடிடும் வெற்றி
உனையென்றும் நாடாதே 
உயிரை உணர்வை உதிரத்துளியை   
அதற்காய் அர்ப்பணித்தால்  
உறங்காச்சுடராய் மறையாக்கதிராய்
உலகில் நிலைத்திடுவாய்!!!!

                                                                                    -ஆனந்தன்

உணர்வுத் தீ

                         உணர்வுத் தீ


நிலவுதேயலாம் நினைவுதேயுமா 
உலகம் மாறலாம் உணர்வு மாறுமா
தேகம் சாகலாம் வேகம் சாகுமா
கனவைச் சேருமுன் கப்பல்
கரையைச் சேருமா?
கவிதைமழையிலே வெப்பம்
விலகி ஓடுமா?

சிலைகள்யாவுமே உளியைச் சார்ந்தது
சிகரமடையுமுன் வலியும் சேர்ந்தது
மழலை மொழியைப்போல் மனமுமாடுது
இதயமெங்கிலும் இரைச்சல்
இசையும் கேட்குது
இனியத் தோல்விகள் மனதை
இரும்பாய் மாற்றுது

மலையில் வழியும் நீர்
அருவியாகலாம்- என்
மனதில் ஓடும் தேரதன்
இலக்கைச் சேருமா
மழையின் வெற்றிதான்
பயிர்களாகுது
மனிதன் வெற்றியோ புகழின்
மகுடம் சூட்டுது
சோர்வை வெல்பவன் வாழ்க்கை
சொர்க்கமாகுது

குழந்தைப் பருவத்தில் நீ
நடக்கக் கற்றதும்
குழறிக் குழறியே நீ
பேசக்கற்றதும்
மனதில் கல்வியை நீ
மதிக்கக் கற்றதும்
அதற்கு முன்வந்த தோல்வியை
மிதிக்கக் கற்றதால்!..
அந்த வயதிலேத் தோல்வியைக்
கொன்றுப் போட்ட நீ
இந்த வயதிலே அதற்
கஞ்சலாகுமோ???

மண்ணில் நீரின்றிப் போனால் 
மரங்கள் தோன்றுமா
மரத்தில் வேரின்றிப் போனால்
மலர்கள் தோன்றுமா
கண்ணில் விழியின்றிப் போனால்
காட்சி தோன்றுமா
உன்னில் வெறியின்றிப் போனால்
வெற்றி கிட்டுமா?- பனி
மழையும் வந்ததால் 
மலையும் கரையுமா?
வறுமை வந்ததால் உன்
திறமை குறையுமா?

தொல்லையேதும் இல்லை- நீ
செல்வாய் உந்தன் எல்லை- உன்னைத்
தடுப்போர் யாரும் இல்லை- தடுத்தால்
தொடுப்பாய் விழியில் வில்லை- உன்
மனதில் தீமை இல்லை- உன்னை
எதிர்ப்போர் இழப்பார் பல்லை- உன் 
எல்லைக்கில்லை எல்லை- நீ
வெற்றிக்காற்றின் பிள்ளை

உடலில் உறுதி உண்டு - உன்
உணர்வில் வேகம் உண்டு - யாரும்
தீமை செய்தல் கண்டு - நீ
கொடுக்கால் கொல்லும் நண்டு- உன்
கண்ணில் கருணை உண்டு- நம்  
தமிழில் பெருமை உண்டு- உன்
முயற்சியும் உழைப்பையும் உண்டு - நீ
வெற்றியைப் பருகிடும் வண்டு!!!! 

                                                                               -ஆனந்தன்


கருமக் காதல்

          
                          
                    கருமக் காதல்

காதல் வேண்டாம் காதல் வேண்டாம் 
கலங்கச் செய்யும் காதல் வேண்டாம்
கண்ணாடிப்போல் எந்தன் மனது- அதைக்
கல்லாலுடைக்கும் காதல் வேண்டாம்

கேடுகெட்ட எந்தன் மனமே
எதற்கு நினைத்தாய் அவளை
கேவலமானது காதல் உணர்வு
இனிமேல் வேண்டாம் கவலை

ஏன்டா இந்த உணர்வுவந்து
ஆட்டிப்படைத்து என்னை 
வேண்டாவெறுப்பாய் சுமந்திருந்தேனோ- என்காதல்
இன்று அடைந்தது மண்ணை

எந்தனருகில் நிற்கக்கூட
தகுதியில்லை உனக்கு- இனி
உந்தன்நிழலை நினைக்கக்கூட
உரிமையில்லை எனக்கு

யாரோப்பெற்ற பெண்ணுக்காக
நீயேன் உருகிநின்றாய்
உந்தன்வாழ்வில் ஒருசில ஆண்டை
முழுதாய் நீயும் தின்றாய்

பெண்ணின் அழகில் மயங்கிநீயும்
பித்தனாகவில்லை- உன்
உள்ளம் என்பதன் உணர்ச்சிப்பெருக்கால்
உணர்ந்தாய் வாழ்வின் எல்லை

அன்றாடம் உன்னையது
ஏங்கவைக்கும்
அடுக்கடுக்காய் அவப்பெயரை
வாங்கவைக்கும்
எப்போதும் பகற்கனவில்
தூங்கவைக்கும்- தன்
மானத்தை உன்னைவிட்டு
நீங்கவைக்கும்

காதலது உன்செருப்பில்
ஒட்டியிருக்கும் தூசி- அது
எப்போதோ உன்மனதில்
பட்டிருக்கும் யோசி
நேரத்தைப் போக்காதே
கனவுடனேப் பேசி- உன்னை 
வாழவைக்கும் லட்சியத்தை
மனதாலே நேசி 

அழகுப்பெண்கள் இதயமெல்லாம்
அடைந்திருக்கும் கல்லடா- அதை
அடைய நினைத்தால் உடைந்துவிடும்
உன்னுடையப் பல்லடா
பெண்ணைத்தேடி தெருவில் ஓடும்
புத்திக்கெட்ட மானிடா
உன்னைத்தேடி உலகம்வரும்
நாளுமெந்த நாளடா???????

                                                                            -ஆனந்தன்


Wednesday, November 16, 2011

உணர்வருவி

                      உணர்வருவி

நடந்தால் கிடைக்க வாய்ப்புண்டு 
கிடந்தால் ஒன்றும் கிடைக்காது
கிளம்பிஎங்கும் செல்லாமல் 
புலம்பித் துளியும் பயனில்லை - வெற்றிப்
பசியில் நீயும் அலைந்தால்தான்- அதன் 
ருசியை வாழ்வில் அடைந்திடுவாய்...

மரணம் என்றும் உனக்காக
சரணம் செய்துப் போகாது - உன்
நெஞ்சின் சபதம் நிறைவேற 
அஞ்சாமல் நீ செயல்படுவாய்

நேற்றுவரையில் இங்கே நீ 
தோற்றதை எல்லாம் மறந்திடுவாய்
நாளை வெற்றிப்பாதையிலே - உன்
காலைவைத்துப் பார்த்திடவே 
வீறுகொண்டு எழுந்திடுக - வியர்வைச்
சாறில் விடியல் அடைந்திடுக...

வாய்ப்புகளென்றும்  உன்வீட்டின் 
வாசல்படியைத் தட்டாது
வெற்றியின் வெறியும் குறைந்தாலே - உன்
லட்சியமென்றும் கிட்டாது

நம்பிப் போராடு; நாளை உன்னோடு
வெம்பிப் போனாலோ வெற்றி மண்ணோடு

வாழ்க்கையிலே வென்றவர்கள் 
வலியின்றி வென்றதில்லை
வலிகண்டு அஞ்சியவன்
வெற்றிக்கனி தின்றதில்லை

தரித்திரமென்று எதுவுமில்லை- நீ
சரித்திரம் படைககவேப்  பிறந்தபிள்ளை

மனதில் தளர்ச்சி கொண்டால் - உனக்கு
உலகில் வளர்ச்சியில்லை 
முகத்தில் மலர்ச்சி கொண்டால்  - உன்னை 
மதிக்காதோர் யாருமில்லை

யுகங்களெல்லாம் மாறிவிடும்- மனித
முகங்களுமிங்கே மாறிவிடும்
நீயுமோர் நாள் இறந்துபோவாய் - சேர்த்த  உன்
புகழது மட்டும் சிறந்து நிற்கும்

சோம்பலாக நீயிருந்தால்- உன் 
சாம்பல்கூட மதிக்காது
உனக்காக எப்போதும் திறந்திருக்கு கதவு- மனம்
பிணக்காக இல்லாமல் பிறருக்கு உதவு

உயிரினைவிட உழைப்பினை நேசி
காதலினைவிட கடமையினை நேசி
சாமியைவிட சேமிப்பை நேசி
கணினியை நேசி தமிழினை சுவாசி!!!!

                                                                                              -ஆனந்தன்


Thursday, November 10, 2011

சொல்ல ஒன்றும் இல்லையிதில்!!!

சொல்ல ஒன்றும் இல்லையிதில்!!!


ஒவ்வொருநாளும் ஒவ்வொருபொழுதும் 
கண்முன்னாலே வீணாகுது 
கவலையின் சாயலை செயலினில் மறைத்தும்
உள்ளம் அழுவதில் வானாகுது..

விடிந்திடும் பொழுதின் ஒவ்வொரு நொடியும்
ஓய்விலா உழைப்பினை நான் வேண்டினேன்
மடிந்திடும் நேரம் வருவதற்குள்ளே - மனம்
விரும்பிய வாழ்க்கை நான் கேட்கிறேன் 

விருப்பத்தில்மட்டும்  இனிப்பினைவைத்து
முயற்சிக்காதவன் நானல்ல - எனக்கு
தோல்வியைமட்டும் தருவது என்று- இயற்கை
முடிவெடுத்திருந்தால் என்சொல்ல?

திறந்திருக்கும் சொர்க்கம்கூட - என் 
முகத்தைக்கண்டால் மூடிக்கொள்ளும்
கறந்துவைத்த பாலும்கூட- என்
பார்வைபட்டால் திரிந்துபோகும்

விரும்பிய எதுவும் கிடைத்ததில்லை - என்னை
விலக்கிய எதையும் நான் மதித்ததில்லை
இருபத்தைந்து ஆண்டுகளில் - நெஞ்சில் 
இனித்திடும் நிகழ்வுகள் எதுவுமில்லை

ஏமாளி தினமினிமேல்
ஏப்ரல் ஒன்றல்ல
நான் பிறந்த திருநாளை
ஏமாளி தினமெனலாம்

விரக்தியினுச்ச கட்டத்தில்நின்று
அனுதினம் கதறுது எனதுள்ளம்
இருப்பினும் இதயத்தில் இனம்புரியாமல்
தினந்தினம் பெருகுது வெறிவெள்ளம்

ஒவ்வொருஇரவும்  ஒவ்வொருபகலும்
முயற்சியிலேயே முழுமைப்பெறும்
முயற்சியின் வளர்ச்சியில் தடையொன்றுமில்லை
முடிவுகள்மட்டும் தோற்றுவிடும் 

ஓடியநொடிகள் ஒவ்வொன்றும்
ஆண்டுகளாக ஆகிறது- அதை
அருகினில் பார்க்கும் என்னுள்ளம்
அச்சத்தினாலே சாகிறது...

இளநீர் குளுமை நான்வேண்டி
இலக்கை நோக்கி விரைகின்றேன்
இடிகள்தூக்கி என்மீது
இயற்கைபோட கரைகின்றேன்

என்னைப்போல முயற்சிப்போர்க்கெலாம்
எளிதில் வாய்ப்புகள் கிடைக்கிறது
என்ன தவறினை நான் செய்தேனோ?- தோல்வியின்
துயரம் நெஞ்சை அடைக்கிறது...

வெறுமையின் வேதனை தாங்கிடவில்லை
இனியது எனைவிட்டு நீங்கிடுமா?
கருமையாய் தோன்றும் என்மனவானில்
கட்டிடம்கட்டி வாழ்ந்திடுமா?...

கையிலிருப்பதைக் களவாட - நட்பைக்
காட்டிச் சிரித்திடும் ஒருகூட்டம் 
மெய்யிலெங்கும் காயமில்லாமல் - உயிரை
உருவி எடுத்தபின் விடும் ஓட்டம்

கர்ப்பத்திலிருக்கும் சிசுவைக்கூட - தன்
தித்திக்கும் பேச்சால் மயக்கிவிடும் - இந்த
சர்ப்பத்தை விடவும் சாதனை மனிதரை
சந்தித்த உடனே விலக்கவில்லை

பன்றியொத்தப் பதர்களுக்கும்
பரிகாசப் போலானேன்
பஞ்சம்நீக்கும் ஒளியாக
ஜொலிக்க எண்ணி  இருளானேன்...

வலியுடன் வாழ்ந்தேப் பழகியதாலே - தொல்விஎனும்
எலிகளைக் கண்டினி பயமில்லை
நரகத்தின் கொடுமைகள் நகரத்தில் கண்டேன்- அதனால்
எதுவும் எனக்கினி புதிதில்லை

எதிர்வரும்  தோல்விகள் எல்லாம் எனக்கினி
காலின்கீழே செருப்பாகும்
வெற்றியைத் தேடிடும் எந்தன்நெஞ்சம்
எரிமலை கக்கும் நெருப்பாகும்!!!

                                                                                                          -ஆனந்தன் 

Saturday, July 9, 2011

கனவுக்காதலி!!!

           கனவுக்காதலி!



குழலோசை குயிலோசை
எல்லாமும் உந்தன்
குரலோசை போலினிதாய்
என்செவிக்கு இல்லையடி
நாவுருகி நான்பேசும்
தாய்மொழியின் சுவைக்கூட- உன்
வாய்மொழியில் கேட்கையிலே
வண்ணங்கள் கூடுதடி..
முக்கனியாம் சர்க்கரையாம்
மூப்பற்ற வானமுதாம்
எச்சுவைதான் பெரிதென்றால்- உன்
இதழ்ச்சுவையே பெரிதென்பேன்...
வானுலக வெண்ணிலவும்
வாசமலர் பூவினமும்
தேவலோகக் கன்னியரும்
தேடிவந்து சேவைசெய்யும்- உன்
பாதமலர் பட்டுவிட்டால்
பாலையிலும் பூமலரும்
ஓரவிழி தீண்டிவிட்டால்
ஒருபிறவி மோட்சம்பெறும்...

செஞ்சாந்துக் குங்குமமும்
செங்காந்தல் பூநிறமும்
நாணத்தில் நீ சிவக்கும்
நேரத்தில் நிறமிழக்கும்
விழிபறிக்கும் வைரங்களும்
விலைகளற்ற விண்மீன்களும்
உயிர்பறிக்கும் உன்னழகைக்
கண்டுமனம் வெம்பிவிடும்
இமயமலைப் பனியுருகி
எந்தனுடல் மறைந்தபோதும்
தீயின்சூட்டை தவிர்த்து உந்தன்
சுவாசசூட்டில் உயிர்பிழைப்பேன்
முன்பெல்லாம் வானவில்லில்
எட்டு நிறம் இருந்ததுவோ?
வெள்ளைநிறம் தனைத்திருடி
பல்வரிசை செய்ததுயார்?..
கருநாகக் குழலுக்கு
மணமில்லை எனச்சொன்ன
நக்கீரன் முன்வந்தால்
சொற்போரில் வென்றிடுவேன்...

நெடுநாளாய் உனையெண்ணி
மனதிற்குள் தவம் செய்தேன்
மணநாளும் வாராதோ
மழை மண்ணைச் சேராதோ?
ஒருகோடி காதல்பூ
உள்நெஞ்சில் பூக்கக்கண்டேன்
என்காதல் பூவெல்லாம்
உன்கூந்தல் ஏறாதோ?
அடிவானம் சுமக்கின்ற
அக்கினியாம் சூரியன்போல்
உன்மோகத் தாக்குதலில்
என்தேகம் வேகுதடி...
கடிவாளம் இல்லாதக்
காற்றாக உன்னாசை
வருகின்ற வேகத்தில்- உயிர்
வேரறுந்துப் போகுதடி- உன்
நிழல்கூட உனைநீங்கும்- என்
நினைவுன்னை நீங்காது- என்
நினைவுன்னை நீங்கிவிடில்
உடல் ஜீவன் தாங்காது...

இதயமெனும் வீணையதன்

நரம்பறுத்து சிரித்தாய்
இரவுகளில் இரக்கமின்றி
உறக்கத்தையும் பறித்தாய்
மொட்டுவிட்ட காதல்பூவை
முளையிலேயே எரித்தாய்- என்னுள்
மூண்டுவிட்ட ஆசைக்கெல்லாம்
முடிவுநாளைக் குறித்தாய்...
மரணத்தின் வாயிலிலே
நானிருக்கும் போதும்- என்
மனம்முழுதும் உன்நினைவே
நிறைந்திருக்க வேண்டும்
மரணத்தின் பின்கூட
உடலற்ற உயிரும்- என்
மகராணி உன்னைத்தான்
மனதாலேத் தீண்டும்!!!!!


                                                                    -ஆனந்தன்